வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி - பாகம் 4

By TNTJ

மூளை வெந்த ஹிஜ்ரா கமிட்டிக்கு பதிலடி!
( பாகம் 4 )


மடமைவாதம் ஆறு :

-------------------------------------------------------------------------

நாளின் துவக்கம் எது ?

-------------------------------------------------------------------------

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் பல சான்றுகளுடன் விளக்கியிருக்கிறோம். இதற்கு மறுப்பு கொடுப்பவர்களின் கடமையானது, நாம் பட்டியலிட்டிருக்கிற சான்றுகள் அனைத்திற்கும் மறுப்பு கொடுத்து விட்டு நாளின் துவக்கம் மக்ரிப் இல்லை என்று கூற வேண்டும். நாம் ஒரு பத்து சான்றுகளை காட்டி நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்று நிரூபித்தால் அதில் இரண்டு ஹதீஸ்கள் பலகீனமானவை என்று சொல்லி விட்டு, இதன் மூலம் நாளின் துவக்கம் மக்ரிப் இல்லை என்று நிரூபணம் ஆகிறது என்று வாதம் வைத்தால், இது அறிவார்ந்த சபையில் எடுபடுமா?
இந்தக் கூட்டம் அதைத் தான் செய்துள்ளது.
பலகீனமான ஹதீஸ்கள் என இவர்கள் தங்களது மறுப்பில் குறிப்பிட்டிருக்கும் செய்திகள் கீழ்க்காணும் இரு ஹதீஸ்கள் ஆகும்.
லைலத்துல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக்கொண்டோம். இது ரமலான் மாதம் 21 ம் நாள் காலையில் நடந்தது நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மஹ்ரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலத்துல் கத்ர் பற்றி கேட்டுவர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று கேட்டனர். 22 ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன் இது தான் அந்த இரவு என்று கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23 ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரழி) நூல்: அபூதாவூத் 1171


ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: அஹ்மத்(9883), அல்அதபுல் முஃப்ரத்(61), ஷுஅபுல் ஈமான்(7966)
வேடிக்கை என்னவெனில், நாம் நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என்பதற்கு அபூதாவூத் 1174 ஹதீஸை சான்றாகக் காட்டினால் இவர்களோ அபூதாவூத் 1171 பலகீனம் என்கின்றனர். வெங்காயம் கிலோ 30 ருபாய் என்றால், இல்லை தக்காளி 20 ருபாய் என்றல்லவா எழுதப்பட்டுள்ளது? என்று கேட்கின்றனர்.
நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு அடுக்கடுக்காக பல சான்றுகளை நாம் நிரூபித்திருக்கும் நிலையில், அவர்களுக்கு பலகீனம் என்று சொல்ல வசதியாய் தெரிந்த இரு ஹதீஸ்களை மட்டும் எடுத்துக்கொண்டு பதில் சொல்லி விட்டோம்; பதில் சொல்லி விட்டோம் என்று கூச்சலிட்டால் இது சிறு பிள்ளைத்தனமா இல்லையா?
நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு நாம் பலமுறை முன் வைத்திருக்கும் அபூதாவூத் 1174 ஹதீஸ் ( இதே செய்தி புஹாரி 2027இலும் பதிவாகியுள்ளது) இதோ..
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளானில் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் -அந்த இரவின் காலையின்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள்- , யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் சஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாசல் (பேரீச்ச ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே பள்ளிவாசல் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் சுப்ஹுத் தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் ஈரமான களிமண் படிந்திருந்ததை எனது இரு கண்களும் பார்த்தன.
நாளின் துவக்கம் குறித்து நாம் ஏராளமான சான்றுகளை முன் வைத்திருந்த போதும், சிந்திப்பவர்களுக்கு இந்த ஒரு ஹதீஸிலேயே பல கோணங்களில் விடை கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் ரமளானின் நடு பத்தில் இஃதிகாஃப் இருந்து விட்டு 21 ஆம் இரவை அடைந்ததும் இஃதிகாஃபை முடிக்காமல் தொடர்ந்து வரக்கூடிய பகலில் முடித்து விட்டு வெளியேறுகிறார்கள் என்று அந்த ஹதீஸ் சொல்கிறது.

அதாவது நடு பத்து நாட்கள் என்பது இருபதாம் நாளுடன் முடியும்.
ஆகவே இருபத்தி ஒன்றாம் இரவு வந்ததும் அதை முடிக்க எண்ணுகிறார்கள், ஆனால் தொடர்ந்து வரக்கூடிய பகலில் தான் வெளியேறுகிறார்கள் என்று அந்த சஹாபி சொல்கிறார்கள்.
21 ஆம் இரவை அடைந்த பிறகு அந்த இரவின் பகலில் வெளியேறினார்கள் என்றால் அந்த இரவு கழிந்து தூங்கி எழுந்ததும் வரக்கூடிய பகலைத் தான் இது குறிக்க முடியும். அந்தப் பகலை அந்த இரவின் பகல் என்று தான் சொல்கிறார்கள்.
நாளின் துவக்கம் பகல் என்றால் தூங்கி எழுந்ததும் வரக்கூடிய பகல் அடுத்த நாள் ஆகி விடும். அந்த இரவின் பகல் என்று அதைச் சொல்ல முடியாது.

இது, நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு அந்த ஹதீஸ் சொல்லும் முதல் ஆதாரம்.
இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்!

என்பது ஹதீஸ் வாசகம் !

இருபத்தி ஒன்றாம் இரவை அடைந்த பிறகு தான் அடுத்த பத்து நாட்களுக்கு நபி அவர்கள் அழைப்பு விடுக்கிறார்களே தவிர மறுநாள் காலை வெளியேறியதும் அவ்வாறு அழைக்கவில்லை.

மறுநாள் காலை வெளியேறிய பிறகு இவ்வாறு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுத்திருந்தால் 10 நாள் என்கிற கணக்கு சரியாக வராது தான்.
ஆனால், அந்த ஹதீஸில், 21 ஆம் இரவை அடைந்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுக்கிறார்கள் என்று தான் உள்ளது.
வெளியேறுவது தான் அடுத்த பகலிலேயே தவிர, அழைப்பு விடுப்பது என்பது அந்த இரவில் தான்.

அதாவது, 21 ஆம் இரவை அடைந்தால் அதன் பொருள், 20 நாட்கள் முடிந்து விட்டன. 20 நாட்களை முடித்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுக்கிறார்கள்.

இதன் மூலமும் முந்தைய நாளின் முடிவு என்பது மக்ரிப் தான் என்பதும் புலனாகிறது.

மேலும், 21 ஆம் இரவை அடைந்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை நபி (ஸல்) அவர்கள் விடுக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அந்த இரவு மழை பெய்கிறது !!!
எந்த இரவு? 21 ஆம் இரவு !
21 ஆம் இரவு மழை பெய்ததை தொடர்ந்து வரும் பஜர் தொழுகையில் நபியின் நெற்றியில் களி மண் படுகிறது என்று அந்த சஹாபி சொல்கிறார்.

ஒரு இரவைக் கடந்த பிறகு வரக்கூடிய பஜர் என்பது இந்த ஹிஜ்ரா கூட்டத்தாரின் கொள்கையின்படி மறுநாள்.

ஆனால், இந்த ஹதீஸில், இரவை 21 ஆம் இரவு என்றும் தொடர்ந்து வரக்கூடிய பகலையும் 21 ஆம் பகல் என்று தான் சொல்கிறார்கள், 22 ஆம் பகல் என்று சொல்லவில்லை.

இந்த அடிப்படையிலும் நாளின் துவக்கம் மக்ரிப் என்பது நிரூபணமாகிறது.

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு மிக வலுவான சான்றாக இந்த ஹதீஸ் திகழ்கிறது.

இது தவிர, மேலும் பல சான்றுகளை நாம் எடுத்து வைத்திருந்தும் கூட அவற்றையெல்லாம் இந்தக் கூட்டம் கண்டுகொள்ளவேயில்லை. பதில் சொல்ல இயன்றால் தானே கண்டு கொள்வதற்கு...

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு நாம் வைக்கும் மேலும் பல ஆதாரங்கள் :
திங்கட்கிழமை இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீரில் பேரீச்சம்பழத்தை நாங்கள் ஊற வைப்போம். அதைத் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமை அஸர் வரையும் அருந்துவார்கள். (நூல்: முஸ்லிம் 5345)

நான், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்ற போது "நபி (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்?'' என்று அவர் கேட்டார். "வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்'. அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் "நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்? எனக் கேட்டார்கள். நான் திங்கள் கிழமை என்றேன். "இன்று என்ன கிழமை? என்று கேட்டதும் நான் திங்கள் கிழமை என்றேன். அதற்கவர்கள் "இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்.' என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. "இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள். நான், இது பழையதாயிற்றே என்றேன். அதற்கவர்கள் "இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத் தான் போகும் என்றார்கள். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. (அன்று) செவ்வாய் இரவில் தான் மரணித்தார்கள். காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி(1384)

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இறந்த திங்கட்கிழமை இறக்க ஆசைப்பட்டார்கள். அன்று திங்கள் பகல் பொழுதில் இன்று இரவு முடிவதற்குள் மரணித்தால் திங்கள் கிழமை மரணித்தவராக ஆகலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அந்தப் பகலில் மரணிக்காமல் இரவு வந்த பின் தான் மரணித்தார்கள். அந்த இரவுக்குப் பெயரிடும் போது ஆயிஷா ரலி அவர்கள் திங்கள் இரவு எனக் கூறவில்லை. மாறாக செவ்வாய் இரவு என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒரு நாளில் பகல் முடிந்து விட்டால் அடுத்து வரும் இரவு அடுத்த நாளின் இரவே தவிர முந்திய நாளின் இரவு அல்ல என்பது இதில் இருந்து தெளிவாக விளங்குகிறது.
நாளின் துவக்கம் பகல் என்றிருக்குமானால் அபூபக்ர் (ரலி) அவர்கள் இன்றிரவுக்குள் மரணித்து விடுவேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் அன்றிரவு மரணமடைந்த அபூபக்ர் (ரலி) அவர்களை, செவ்வாய் இரவு மரணமடைந்தார்கள் என்று கூறவும் கூடாது. எனவே நாளின் ஆரம்பம் இரவு தான் என்பதை இந்தச் செய்தியிலிருந்தும் விளங்க முடிகிறது.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை இரவிற்குரிய வியாழன் மாலை ஆகும் போது எழுந்து "சொல்லில் மிக உண்மையான சொல் அல்லாஹ்வின் சொல்லாகும்....'' என்று கூறுவார்.

அறிவிப்பவர்: பிலாத் பின் இஸ்மா நூல்: தாரமீ(209)

நபித்தோழர்கள் காலத்திலும் நாளின் ஆரம்பம் இரவாகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு இச்செய்தி சிறந்த சான்றாகும்.
இதைப் போன்ற வாசகம் நபி (ஸல்) அவர்கள் பொன்மொழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: அஹ்மத்(9883), அல்அதபுல் முஃப்ரத்(61), ஷுஅபுல் ஈமான்(7966)

இதைப் போன்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லும் இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

நீ வெள்ளிக் கிழமை இரவை அடைந்து விட்டால் ஜும்ஆத் தொழாமல் (பயணமாக) வெளியே செல்லாதே!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா(5114)

இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் நமது வாதத்தை நிலை நிறுத்துவதாக இருந்தும், இவற்றையெல்லாம் பல வருடங்களுக்கு முன்னரே நாம் மக்கள் முன் வைத்திருந்தும், இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல திராணியற்றவர்கள், கீறல் விழுந்த கிராமஃபோன் போல் சொன்னதையே சொல்லிக்கொண்டு திரிகின்றனர்.

இவர்களது கீறல் விழுந்த கேள்விகளில் ஒன்று,

பிறைச் செய்தியைச் சொல்வதற்கு மாலை வந்தடைந்த அந்த வாகனக் கூட்டம் "நேற்று" பிறை பார்த்தோம் என்று ஏன் கூறினார்கள்? நாளின் துவக்கம் பஜர் என்பதால் தானே?? என்கின்றனர்.

மேலே நாம் அடுக்கியுள்ள சான்றுகள் எதுவும் இவர்களுக்கு ஒரு பொருட்டில்லையாம்.. "நேற்று" என்று அந்த வாகனக் கூட்டம் சொன்னது தான் இவர்கள் கைவசம் உள்ள ஒரே சரக்காம்..

சரி அந்த சரக்காவது சரியான சரக்கா?? இவர்களது கொள்கையை தூக்கி நிறுத்தவல்ல சரக்கா?? இல்லவேயில்லை !

இவ்வாதம் அரபி மொழியில் உள்ள சொல்லுக்குரிய சரியான பொருளை அறியாததால் வந்த வினையாகும்.

அவர்கள் "நேற்று' என்று மொழி பெயர்த்த இடத்தில் அரபி மூலத்தில் "அம்ஸி' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

இதற்கு தமிழில் பரவலாக நேற்று என்று மொழி பெயர்க்கப்படுகிறது. இதனுடைய சரியான பொருள் என்ன? அரபி அகராதி நூலில் பார்வையிடுவோம்.

"ஒரு இரவைக் கொண்டு கடந்து விட்ட நாள்'' (அல்காமூஸுல் முஹீத்).

நடப்பில் உள்ள நாளுக்கு முந்திய நாள், சில நேரங்களில் பொதுவாகக் கடந்து விட்டவைகளையும் குறிக்கும். (அல் முஃஜமுல் வஸீத்)

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தியிருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம். (அல்குர்ஆன் 10:24).

இவ்வசனத்தில் நேற்று என்று மொழிபெயர்த்த இடத்தில் "அம்ஸி' என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. இதற்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருள் அல்ல!

கடந்த நாட்கள் என்ற பொருளே கொள்ள வேண்டும். அதுவே இவ்விடத்தில் பொருத்தமாக அமையும். நேற்று என்ற தமிழ்ச் சொல்லும் கடந்து விட்டவைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

"நேற்று எப்படி இருந்தான்? இன்று எப்படி இருக்கிறான்?' என்று தமிழ் வழக்கில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த “நேற்றுக்கு” 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருளில்லை என்பதை நாம் அறிவோம்.
இதைப் போன்று அரபி மொழியில் "அம்ஸி' என்ற சொல் ஒரு இரவு கடந்த நாளையும் குறிக்கவும், பொதுவாகக் கடந்து விட்ட காலத்தை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில் இரவில் பிறை பார்த்தவர்கள் ஒரு இரவைக் கடந்து வந்து கூறியுள்ளதால் "அம்ஸி' நேற்று என்று பயன்படுத்தியுள்ளனர்.

இங்கே இவர்களுக்கு சான்று எதுவும் இல்லை.


அடுத்ததாக மற்றுமொரு ஹதீஸை பஜர் தான் நாளின் துவக்கம் என்பதற்கு சான்று எனக்கூறி வைத்துள்ளனர்.

அந்த ஹதீஸ் .இதோ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவுகொள்வீர்கள்.
நூல் : புகாரி (5204)
இந்த ஹதீஸில் இரவை அந்த நாளின் இறுதி.. என்று சொல்லப்பட்டிருப்பதால் ஒரு நாளின் துவக்கம் பஜர் தான் என்று வாதிடுகின்றனர்.

இதுவும் நுனிப்புல் மேய்வதால் கிடைத்திருக்கும் முடிவே !

இந்தச் செய்தி நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்பதற்கு ஒரு போதும் ஆதாரமாகாது. இங்கே இறுதி என்று கூறப்படுவது இஷாத் தொழுகைக்குப் பிறகு படுக்கைக்குச் செல்லும் நேரம்தான். வேண்டுமானால் இரவு பத்து மணிக்கு பிறகு 11 மணிக்கு நாளின் துவக்கம் என்று தான் இவர்கள் கூறவேண்டும்.
இங்கே இறுதி என்று கூறப்படுவதின் உண்மையான பொருள் ஒரு மனிதன் கண்விழித்ததிலிருந்து அவன் இறுதியாக தூங்கச் செல்லும் நேரம் என்ற கருத்தில் தான்.
ஒரு பள்ளிக் கூடம் காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு முடிகிறதென்றால் கடைசி வகுப்பை அந்த நாளின் இறுதி வகுப்பு என்று கூறுவார்கள். இதனால் மாலை ஐந்து மணிதான் நாளின் கடைசி என்றாகி விடாது.
ஒரு வருடம் ஜனவரி மாதம் தான் ஆரம்பமாகிறது என்று நாம் அறிவோம். ஆனால் பள்ளிக்கூடத்தில் பாட நாட்கள் மார்ச் மாதத்தில் முடிவடையும் போது அதனை வருடத்தின் கடைசி நாள் என்பார்கள்.
இங்கே கவனிக்க வேண்டியது மார்ச் என்பது வருடத்திற்கே கடைசி அல்ல. மாறாக அந்தப் பள்ளியின் ஆரம்ப பாட நாட்களை கவனிக்கும் போது அது பாடநாட்களுக்கு வருடக் கடைசியாக இருக்கும்.
அது போன்று இங்கு ஒரு மனிதன் விழிப்பது அவனுக்கு ஆரம்பம், அவன் மீண்டும் படுக்கைக்குச் செல்வது அவனுக்கு கடைசி. இதன் அடிப்படையில்தான் இங்கே நாளின் கடைசி என்று கூறப்பட்டுள்ளது.
இதே ஹதீஸ் அஹ்மதில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
مسند أحمد بن حنبل (4/ 17)
16269 - حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان بن عيينة عن هشام عن أبيه عن عبد الله بن زمعة وعظهم في النساء وقال : علام يضرب أحدكم امرأته ضرب العبد ثم يضاجعها من آخر الليل
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين
உங்களில் ஒருவர் தன்னுடைய மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று எதற்காக அடிக்க வேண்டும். பிறகு இரவின் கடைசியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்.
நூல் அஹ்மத் (16269)
இரவின் கடைசி ஃபஜ்ர் வரை உள்ளது என்பதுதான் சரியானது ஆனால் இங்கே இரவில் தூங்கச் செல்லும் நேரத்தை இரவின் கடைசி என்று கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்தே இந்த ஹதீஸ் நாளின் துவக்கத்தைப் பற்றிக் கூறப்படவில்லை. மாறாக ஒரு மனிதன் தூங்கச் செல்லும் கடைசி நேரத்தைப் பற்றி குறிப்பிடுகிறது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதே செய்தி பின்வருமாறும் இடம் பெற்றுள்ளது.

مسند أحمد بن حنبل (4/ 17)
16266 - قال حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع عن هشام عن أبيه عن عبد الله بن زمعة قال : سمعت النبي صلى الله عليه و سلم يذكر النساء فوعظ فيهن وقال علام يضرب أحدكم امرأته ولعله ان يضاجعها من آخر النهار أو آخر الليل قال
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين

உங்களில் ஒருவர் தன்னுடைய மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று எதற்காக அடிக்க வேண்டும். பிறகு பகலின் கடைசியில் அல்லது இரவின் கடைசியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்.
நூல் அஹ்மத் (16266)
பகலின் கடைசி , அல்லது இரவின் கடைசி என்று வந்துள்ளது. பகல் இரவு ஆகியவற்றில் எது முதலாவது என்பது கூறப்படவில்லை. எனவே இந்தச் செய்தி நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்பதற்கு ஒரு போதும் ஆதாரம் ஆகாது.
அடுத்ததாக, 17:12 இறை வசனமும் நாளின் துவக்கம் பஜ்ர் என்று சான்று பகர்கிறது என்று கூறி, தங்கள் தரப்பிலும் ஆதாரங்கள் வைக்கத்தான் செய்கிறோம் என்று காட்ட முயற்சிக்கிறது இந்த கூட்டம்.
இவர்கள் நிஜமாகவே சுய அறிவுடன் தான் இதை எழுதுகிறார்களா அல்லது பிறை, பிறை, கணிப்பு, ஆய்வு, விஞ்ஞானம், மெய்ஞானம் என்று தூக்கத்திலும் அதையே சிந்தித்து (ஆம், இவர்களுக்கென்று உருப்படியான வேறு எந்த மார்க்க தாவாப்பணிகளும் கிடையாதே) சிந்தனை மழுங்கிப் போனதா என்று நிஜமாகவே நாம் சந்தேகம் கொள்கிறோம்.
இவர்கள் சுட்டிக்காட்டும் வசனத்திற்கும் நாளின் துவக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?
இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவு படுத்தியுள்ளோம். 17:12
இது தான் இவர்கள் சுட்டிக்காட்டும் வசனம்.
இரவின் சான்றைக் குறைத்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம் என்று வருகிறது. ஆகவே ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக்கணக்கையும் அறிவதற்கு பகலின் சான்றை வெளிச்சமாக்கியதாக அல்லாஹ் சொல்வதிலிருந்து பகல் தான் நாளின் துவக்கம் என்று இவர்களது ஏழாவது அறிவுக்கு எட்டுகிறதாம்.
.அதை விட, தங்களது இந்த மலட்டு சிந்தனை எப்படி தோன்றியது என்பதை விளக்க, அல்லாஹ்வின் மீதே பொய் கூறி இட்டுக்கட்டுகின்றனர் என்பதே இங்குள்ள உச்சகட்ட ஹைலைட் !
அதாவது, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக்கணக்கையும் அறிய வேண்டும் என்று அல்லாஹ் கூறி விட்டான்.
அல்லாஹ் இப்படி மொட்டையாக சொல்வானா?? ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக்கணக்கையும் அறிய வேண்டும் என்றால் எப்படி அறிவது என்பதையும் அல்லாஹ் சொல்வான். அது தான் பகலிலிருந்து கணக்கை துவங்குவது... அதனால் தான் பகலின் அத்தாட்சியை வெளிச்சமாக்கினோம் என்கிறான்...
என்று,..அல்லாஹ் சொல்லாத செய்திகளை இவர்களாக திணித்து அல்லாஹ்வின் மீதே பொய்யுரைக்கிறார்கள் என்றால் தங்களது நிலையை நியாயப்படுத்த எத்தகைய தகுதிக்கும் இறங்குவார்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகவில்லையா?
நாளின் துவக்கத்தைச் சொல்வதற்கா அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கியுள்ளான் ?
காலக்கணக்கை அறிவதற்கு சூரியனை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்கிற விஷயத்தைச் சொல்வதற்கு இறக்கப்பட்ட வசனம் தான் இது.
ஆகவே தான் பகலைத் தந்திருக்கிறேன் என்று சொல்லாமல் பகலின் சான்றைத் தந்திருக்கிறேன் என்கிறான். பகலின் சான்று என்பது சூரியன். சூரியனை பிரகாசமாக்கியதன் மூலம் வியாபாரம், இன்னபிற தொழில்கள் என அல்லாஹ்வின் அருளை தேடி செல்லலாம், அத்துடன் காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த கருத்து தான் இவ்வசனத்திலிருந்து கிடைக்குமே தவிர, பகல் தான் முதன்மை என்பதற்கோ, ஃபஜர் தான் ஆரம்பம் என்பதற்கோ இவ்விடம் எந்த சான்றுமில்லை !
இவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய 24 பக்க நோட்டீசில், நாளின் துவக்கம் ஃபஜ்ர் தான் என்பதற்கு சான்றாக இவர்கள் வைத்த ஆதாரங்கள் மேலே உள்ள மூன்று தான். அந்த மூன்றின் லட்சணத்தை நாம் பார்த்துக் கொண்டோம்.
அது போல், நமது நிலைபாடான மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்கிற கருத்தை முறியடிக்கிறேன் பேர்வழி என்று புகுந்த இவர்கள், இரண்டு செய்திகளை பலகீனம் என்று அறிவிப்பு செய்து செய்து விட்டு, நாம் அடுக்கிய ஏனைய சான்றுகள் குறித்து வாய் திறக்காத அவலநிலையையும் நாம் கண்டோம்.
கைவசம் சரக்கு இல்லையென்றாலும் எதையாவது உளறி பக்கங்களை நிரப்பி வைத்தால்தான் பாஸ் மார்க்காவது இடுவார்கள் என்று எண்ணுகிற பள்ளிக்கூட மாணவன் போல், 24 பக்கம் நிரப்ப வேண்டும் என்பதற்காக சந்தையில் அழகுக்கு வைத்தும் வருடக்கணக்கில் விலை போகாத பழைய அழுகிய கேள்விகளை தூசு தட்டி மீண்டும் பட்டியலிட்டுள்ளனர்.
பொதுக்கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள், இணையதளங்கள், நூல்கள், கேள்வி பதில்கள் என பல வருடங்களாக எந்தெந்த கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் கொடுத்து வருகிறோமோ அந்தக் கேள்விகளையே சுருதி மாறாமல் அப்படியே இங்கு ஒப்புவிக்கிறார்கள் என்றால், இவர்களை மிஞ்சிய ஒரு அறிவாளிகள் வேறு எவராவது இருக்க முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக